பக்கங்கள் 11–21
தாவர தீர்வு முறையில் சுற்றுச்சூழல் மாசுநீக்கம்
தாவர தீர்வு முறையில் சுற்றுச்சூழல் மாசுநீக்கம்
முனைவர் கு.க. கவிதா
சுற்றுச்சூழல் என்பது நம்மை சுற்றியுள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளின் ஒன்றை ஒன்று சார்ந்த அமைப்பே அகும். புவியின் சுற்றுச்சூழல் சமநிலையில் மாற்றம் மற்றும் உயிருள்ள, உயிரற்ற காரணிகளில் மாறுபாடு அதனால் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டே சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது.
சுற்றுச்சூழல் இயற்கையாகவும், மனித செயல்பாடுகளால் பல்வேறு வகையில் பாதிப்பு அடைகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புகளில் மிக முக்கியமானது சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது இயற்கைக்கு புறம்பாக அல்லது தேவையில்லா இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றத்தினால் சுற்றுச்சூழல் அதாவது நீர், நிலம், காற்று மற்றும் உயிரினங்களாகிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளுக்கு கேடு உண்டாவதையே சுற்றுச்சூழல் மாசுபாடு என்கிறோம் (Schnoor, 2002).
சுற்றுச்சூழல் மாசுபாடுக்கான தீர்வுமுறைகள் பல வகைகள் உண்டு. அவை இயற்பியல், வேதியியல், உயிரியல் முறைகளில் நீர், நிலம், காற்றில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் காரணிகளை சரி செய்வதே ஆகும்.
அதில் மிகவும் எளிமையான மற்றும் இயற்கையான முறை என்பது உயிரியல் தீர்வு முறை (உயிரித்தீர்வு) ஆகும். உயிரித் தீர்வு என்பது உயிரினங்களால் தாவர, விலங்கு மற்றும் நுண்ணுயிர்களைக் கொண்டும் அவற்றின் விளைபொருட்கள், பகுதிகள், எச்சங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழல் மாசுக்களை அகற்ற, குறைக்க, விளைவுகளை கட்டுப்படுத்த தீர்வுகாணும் முறையே உயிரித்தீர்வு ஆகும்.
உயிரித் தீர்வு முறையில் உட்பிரிவாக தாவரங்கள், தாவரப் பொருட்கள் அதன் கழிவுகளைக் கொண்டு மாசுக்களை நீக்க அல்லது குறைக்க பயன்படுத்தும் முறையே தாவரத்தீர்வு முறையாகும்.