வரலாறு

தழைத்தோங்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம்

இந்தியப் பண்பாட்டின், நாகரிகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகவும் தொன்று தொட்டு இன்றுவரை நமது நாட்டின் கலை, இலக்கியம், சமயம், தத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்புக்கு உரிமையுடையதாகவும் விளங்குவது தமிழ்மொழி. தமிழ்மொழியின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல், பண்பாடு ஆகியவற்றைச் சார்ந்த துறைகளுக்குப் பொலிவும் வலிவும் ஊட்ட ஒரு பல்கலைக்கழகம் அமைவது இன்றியமையாததாகும் என்று அரசு கருதியது.

தமிழையொத்த தொன்மையும், இந்தியப் பண்பாட்டிற்கு மிகுந்த முதன்மையும் கொண்ட வடமொழிக்குப் பல்கலைக்கழகங்கள் பல்வேறிடங்களில் அமைந்துள்ளன. இந்திய அரசின் உதவியும், பல்கலைக்கழக நல்கைக் குழுவின் இசைவும் பெற்று அத்தகைய பல்கலைக்கழகங்கள் செயற்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவுவதென நம் தமிழக அரசு மேற்கொண்ட முடிவைத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய நாகரிகத்தின், பண்பாட்டின் ஊற்றுக்கள் அனைத்தையும் ஆழமாகவும், விரிவாகவும் ஆராய வேண்டுமென்ற எண்ணமுள்ள உலக நாட்டவர் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

இப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள 1.கலைப்புலம், 2.சுவடிப்புலம், 3.வளர்தமிழ்ப்புலம், 4. மொழிப்புலம், 5.அறிவியல்புலம் என்ற ஐந்து புலங்களும் 25 துறைகளைப் பெற்றுள்ளன. அத்துறைகள் வருமாறு: 1. சிற்பத்துறை, 2. இசைத்துறை, 3. நாடகத்துறை, 4. ஓலைச்சுவடித்துறை, 5. அரிய கையெழுத்துச்சுவடித்துறை, 6. கல்வெட்டியல்துறை, 7. நீரகழாய்வு மையம், 8. அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, 9.மொழிபெயர்ப்புத் துறை, 10. அகராதியியல் துறை, 11. சமூக அறிவியல் துறை, 12. அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, 13. இலக்கியத் துறை, 14. மொழியியல் துறை, 15. தத்துவமையம்,16. பழங்குடி மக்கள் ஆய்வு மையம், 17. இந்திய மொழிகள் பள்ளி 18.நாட்டுப்புறவியல் துறை, 19. சித்தமருத்துவத்துறை, 20. தொல்லறிவியல் துறை, 21. தொழில், நிலறிவியல் துறை, 22. கணிப்பொறிவியல் துறை, 23. கட்டடக்கலைத்துறை, 24. சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை, 25. கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை இவற்றோடு தனித் திட்டங்களாக, அறிவியல் – வாழ்வியற் களஞ்சிய மையம், பெருஞ்சொல்லகராதித் திட்டம், தூயதமிழ்-சொல்லாக்க அகரமுதலிகள் திட்டம் ஆகியனவும், பதிப்புத்துறை, நூலகம், அருங்காட்சியகம் ஆகியனவும் அமைந்துள்ளன.

உலகளாவி வருவோர்க்கெல்லாம் தமிழ்மொழியை, பண்பாட்டை, நாகரிகத்தை, கலைநலங்களைக் கற்பிக்கும் நிறுவனமாக, பண்பாட்டுப் பலகணியாக, ஆய்வரணாக இப்பல்கலைக்கழகம் திகழ்கிறது. சீனா, சப்பான், போலந்து, செக்கோசுலோவேகியா, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா முதலிய பல நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுக்குத் தமிழ்மொழி, கலை, இலக்கியம், பண்பாட்டுக்கல்வி வாய்ப்பை வழங்கியுள்ளது. ஒவ்வோராண்டும் இந்திய ஆட்சிப்பணிப் (ஐ.ஏ.எஸ்) பயிற்சியாளர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சியையும் வழங்குகிறது.

ஆயிரம் ஏக்கர் அகன்ற நிலப் பரப்பில் தஞ்சைக்கு மேற்கே திருச்சி சாலையில் வல்லம் சாலையிலிருந்து சிறு தொலைவில் அமைந்துள்ள இப்பல்கலைக்கழகம் அறிவுலகமும் ஆராய்ச்சியுலகமும் பாராட்டிப்போற்றும் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறது. ஆய்வுகளை மேற்கொள்வதோடு பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இப்பல்கலைக்கழகத்தின், சித்த மருத்துவத்துறை, பொதுமக்களுக்கு நேரடியாகத் தொண்டாற்றி வருகிறது. பதிப்புத்துறை அடிப்படை நூல்களை வெளியிட்டு வருகிறது. மண்ணின் மரபில் ஊன்றிய புதிய நாடகப் படைப்புகளுக்கு உந்து திறனாக விளங்குவது நாடகத்துறை. இந்திய இசையில் தமிழரின் பங்கினை வெளிக் கொணரும் முதன்மை நோக்கோடு இசைத்துறை செயற்படுகிறது. வரலாற்று நெறியிலான படிமப்பாங்குகள், படிமக்கலை ஆய்வுகள், கோயிற் சிற்பங்கள் தொடர்பான சிற்ப நுணுக்க ஆய்வுகளை மேற்கொள்ளுதல் சிற்பத்துறையின் நோக்கமாகும். கல்வெட்டுகள், தொல்லியல் அகழாய்வு ஆகியவற்றின் துணை கொண்டு தமிழ்நாட்டின் பழங்கால, இடைக்கால வரலாற்றை ஆராய்தல் கல்வெட்டியல் துறையின் நோக்கமாகும். மன்னார் வளைகுடாப் பகுதியில் கடலுக்கடியிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட கல் நங்கூரங்களை வெளிக்கொணர்ந்து ஆய்ந்த பெருமை நீரகழாய்வு மையத்தைச் சாரும். தமிழ்ச் சுவடிகளைத் தேடித் தொகுத்து அறிவியல் முறைப்படி பாதுகாத்தல், அருஞ்சுவடிகளை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிடல், சுவடி ஆய்வு செய்து அரிய நூல்களை மீளவும் வெளியிடல் ஆகியன ஓலைச்சுவடித் துறையின் நோக்கமாகும். அரிய கையெழுத்துச் சுவடிகளைத் திரட்டுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் அச்சுவடிகளின் அடிப்படையில் தமிழக வரலாற்றை ஆராய்வதும் அரிய கையெழுத்துச்சுவடித்துறையின் தலையாய நோக்கமாகும். தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, அமெரிக்கக் குடியரசு, பிரிட்டன் ஆகிய நாடுகளில் குடியேறி வாழ்ந்து வரும் தமிழர்கள் தொடர்ந்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும் அறிந்து போற்றவும், மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழில் உயர்கல்வி பெற்று மேம்பாடடையவும் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை 1982 – ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறது. அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் வழி அறிவியல் பரப்புதல், அறிவியல் துறையில் தமிழின் பயன்பாடுபற்றி ஆராய்தல் என்னும் இரண்டு நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டு வருகிறது. மொழிபெயர்ப்பினால் தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டும் என்பது மொழிபெயர்ப்புத்துறையின் தலையாய நோக்கம். பொது மற்றும் சிறப்பு நிலை அகராதிகள், பல வகைப்பட்ட ஆய்வடங்கல்கள், சொற்றொகுதிகள், சொற்பொருள் அடைவுகள், தொடரடைவுகள் முதலிய நோக்கு நூல்களைத் தொகுப்பது தொகுப்பியல் துறையின் நோக்கங்களுள் ஒன்று. சமூகவியல் மற்றும் பொருளாதாரம் முதலிய இயல்களிலும் தமிழ்மொழி வழியாக நூல்கள் எழுதவேண்டும் என்பதற்காகவும் சிற்றூர்ப்புறச் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்வதற்காகவும் அவற்றின் அடிப்படைச் செய்திக் கூறுகளைத் திரட்டுவதற்காகவும் மற்றும் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான பயன்மதிப்பீட்டுத் திட்டங்களை ஆராயவும் சமூகவியல் துறை செயற்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் குறித்த பல்வகை உயராய்வுகளை மேற்கொள்ளுதல் இலக்கியத்துறையின் முதல் நோக்கமாகும். தமிழ் மொழியமைப்பின் பல்வகைக் கூறுபாடுகளை ஆராய்வது மொழியியல்துறையின் நோக்கமாகும். தமிழும் தத்துவமும் இணைபிரியாதவை.

மொழிப்புலத்தின் தத்துவமையம் தமிழர்களுக்கே சிறப்பாக உரிமையுடைய சைவசித்தாந்தம், விசிட்டாத்துவைதம் ஆகிய இருபெரும் மெய்யியல் நெறிகளை விரிவாக ஆராயும் நோக்கம் கொண்டது. மலையின மக்களின் சமூகவியல், பண்பாட்டியல், மொழியியல் ஆகிய கூறுகளை ஆராய்ந்து அம்மக்களின் மேம்பாட்டுக்குப் பயன்படும் வகையில் மலைவாழ் பழங்குடியினர் ஆய்வுமையம் பணியாற்றுகிறது. நாட்டுப்புறவியல் துறையினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கட்கும் சென்று கள ஆய்வுகள் நிகழ்த்தி மக்களிடையே தவழ்ந்துவரும் நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றையும் பதிவுசெய்து அவற்றில் அரிய ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர். இந்திய மொழிகளைக் கற்பித்தல், இந்திய இலக்கிய இலக்கணங்களில் ஆய்வு மேற்கொள்ளல், ஏனைய இந்திய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல், தமிழ்-பிற இந்திய மொழி அகராதிகள் தயாரித்தல் ஆகியவை இந்திய மொழிகள் பள்ளியின் நோக்கங்களாகும்.

தொழில் மற்றும் நில அறிவியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்கு அணிசேர்க்கும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த தொழில்நுட்பத் துறையாக வளர்ந்துள்ளது. ஆய்வினைத் தரப்படுத்துதல், துல்லியப்படுத்தல், வேகப்படுத்தல், நேரம் மிச்சமாக்கல் மற்றும் உடலுழைப்பையும் குறைத்தல் போன்ற பல கண்ணோட்டங்களில் தமிழாய்வுப் பணிகளுக்குக் கணிப்பொறியைப் பயன்படுத்துதல், சிறப்பாகக் கணிப்பொறி ஒரு மொழி ஆய்வுக் கருவி என்னும் கோட்பாட்டை நிறுவும் வண்ணம் மொழி ஆய்வுப் பணிகளில் கணிப்பொறியைப் பயன்படுத்துதல் கணிப்பொறி அறிவியல் துறையின் நோக்கமாகும். உயர் அறிவியல் பாடங்களைத் தமிழில் நடத்துவது இதன் சிறப்புகளாகும். இரு பட்டயப்படிப்புகளுடன் கணிப்பொறியில் முது அறிவியல் பட்ட மேற்படிப்பை நடத்துகிறது. கட்டடக்கலைத்துறை தஞ்சை மாவட்டக் கிராமியக் கோயில்கள், தஞ்சை நகரிய மண்டபங்கள், கட்டடக் கலையில் ஆதார நூல்கள் இரௌரவ ஆகம மொழிபெயர்ப்பு ஆகிய பல திட்டங்களை நிறை வேற்றியுள்ளது. தொல்லறிவியல்துறை பண்டைய தமிழ் மக்களின் அறிவியல் செய்திக் கூறுகளை இன்றைய அறிவியல் நோக்கில் ஒப்பிட்டு இவற்றை எதிர்கால அறிவியல் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் ஒருங்கிணைக்கும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இன்பத் தமிழ் மொழி இயல், இசை, நாடகம் எனப்பிரிந்து இணைந்து வளர்ந்து வரும் சிறப்பினைக் கொண்டது.நாடகம் நலனும் பயனும் தரவல்லது. கண்டும் கேட்டும் இன்புறும் சிறப்பினைக் கொண்டது. இத்தகு நாடகக்கலை தமிழ் மொழியில் செழித்து வளர்ந்துள்ளது. களஞ்சியங்கள் பலவற்றை வெளியிட்டுவரும் தமிழ்ப் பல்கலைக்கழகம் நாடகத்திற்கும் களஞ்சியம் காண விழைந்துள்ளது. தமிழ்மொழியில் ஏற்பட்ட வளர்ச்சியாலும், அறிவியல் துறையில் தோன்றியுள்ள புதுக் கலைச்சொற்களின் பெருக்கத்தாலும் வளர்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான சொற்களை உள்ளடக்கிய புதிய அகராதியின் தேவையைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறைவேற்றி வருகிறது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இதுவரை 57 அறக்கட்ளைகளைப் பல்வேறு பெயர்களில் நன்கொடையாளர்கள் நிறுவியுள்ளனர். இவற்றின்மூலம் அறிஞர்களின் சொற்பொழிவுகளும். கருத்தரங்குகளும், ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

செய்திகளும் நிகழ்வுகளும்