வரலாறு

அறிமுகம்

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக, 1982 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டத்தின் 9 ஆம் விதியின் கீழ், 15.09.1981-ஆம் நாளன்று தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு, புது தில்லி, 11.06.1985-ஆம் நாளன்று இந்தப் பல்கலைக்கழகத்தை அங்கீகரித்தது.

தமிழ் மொழிக்கென்றே தனியொரு பல்கலைக்கழகத்தை உருவாக்கும் எண்ணம், 1925-ஆம் ஆண்டிலேயே தமிழ்ச் சமூகத்தின் கற்றறிந்த அறிஞர்களின் மனதில் உதித்தது. இந்த எண்ணத்திற்கு, 1981 ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் தான் உறுதியான வடிவம் அளிக்கப்பட்டது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில், கலை மற்றும் பண்பாட்டின் உச்சமாக தஞ்சாவூர் பல நூற்றாண்டுகளாக விளங்கி வருவதால், தமிழியல் துறையில் உயர்நிலை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காகவே தஞ்சாவூரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்தப் பல்கலைக்கழகம் “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்ற இலச்சினையைக் கொண்டுள்ளது. இதன் பொருள் “எண்ணுவதெல்லாம் உயர்வாக எண்ணுதல் வேண்டும்” என்பதாகும்.

இது உயர் ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஒற்றை நோக்குடையப் பல்கலைக்கழகம் ஆகும். இணைப்புக் கல்லூரிகள் எதுவும் இல்லை. தொடக்கத்தில் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தியது. பின்னர் இந்த பல்கலைக்கழகம் இளைஞர்களின் கல்விப் பயிற்சிக்காக தனது செயற்பரப்பை விரிவுபடுத்தத் தொடங்கியது. 1992-ஆம் ஆண்டு முதல், பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் ஆய்வியல் நிறைஞர் (M. Phil.) மற்றும் முனைவர் பட்டங்களை வழங்குவதன் மூலம் கல்வி ஆராய்ச்சியை மேற்கொள்ளத் தொடங்கியது.

பத்தாண்டுகளுக்குப் பின்னர், இதன் நோக்கம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டில், மானுடவியல் முதுகலைப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன, பின்னர் 2005-ஆம் ஆண்டில், தமிழ்ச் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் அறிவியலில் முதுகலைப் பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. பின்னர் தொலைதூரக் கல்வி இயக்குநரகம் மூலம், பல்வேறு சான்றிதழ், பட்டய மற்றும் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டன. இதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது.

நோக்கங்கள்

தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் உயர்நிலை ஆராய்ச்சி மையமாகச் செயல்படுதல். உயர்தர ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலை ஊக்குவித்தல்.

இலக்கியம் பயிலவும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் குறித்து ஆராய்ச்சி செய்யவும் ஆர்வமுள்ள, இந்தியாவிலும், இந்தியாவிற்கு வெளியேயும் வாழும் தமிழ் ஆர்வலர்களுக்குப் பயிற்சியளித்தல்.

கலை, பண்பாடு, இசை, மேடை நாடகங்கள், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, இலக்கியம், இலக்கணம், மொழியியல், நாட்டுப்புறவியல், வரலாறு, தொல்லியல், கல்வெட்டு, சமயம், தத்துவம், புவியியல்,  நில அறிவியல், பண்டைய அறிவியல், வானியல், வழிசெலுத்தல் மற்றும் கப்பல் போக்குவரத்து, சோதிடம், சித்த மருத்துவம், பொறியியல் சார்ந்த அறிவியல் படிப்புகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகிய துறைகளில் தமிழ் மூலங்களிலிருந்து கிடைக்கும் வளமான பாடப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிக்கு வகை செய்தல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஊக்குவித்தல்.

சுற்றுச்சூழல் மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை, கனிம வளங்கள், கடலோர மேலாண்மை, நிலத்தடி நீரைக் கண்டறியும் ஆய்வுகள், பேரிடர் மேலாண்மை மற்றும் தொலை உணர்வு மற்றும் புவி அறிவியல் மற்றும் சமூகத்திற்கான புவித் தகவலமைப்புப் (GIS) பயன்பாடு தொடர்பான ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துதல்.

தமிழ்க் கணினியை (மென்பொருளை) உருவாக்குதல்.

பிற இந்திய மொழிகள் மற்றும் பண்பாட்டுடன் தொடர்புடைய தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாடு குறித்த ஆய்வுகளைத் தொடங்குதல்.

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் போக்குகள் பற்றிய ஆழமான புரிதலின் அடிப்படையில் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்தல்.

தமிழில் மானுடவியல் மற்றும் அறிவியல் கலைக்களஞ்சியங்களை உருவாக்குதல்.

இலக்கிய மற்றும் பண்பாட்டுச் சொற்களுக்கும் அறிவியல் பாடங்களுக்கும் அகராதிகளை உருவாக்குதல்.

இப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையே ஒரு பண்பாட்டுப் பாலமாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தின் நோக்கங்களுக்கேற்ப மற்றும் தேவைக்கேற்ப நூல்களைப் பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தல் மற்றும் தமிழ் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்தல். தமிழ் மொழி மற்றும் பண்பாடு தொடர்பான அறிவைப் பரப்புதல்.

ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய காகித கையெழுத்து சுவடிகளைப் பாதுகாத்தல் மற்றும் வெளியிடுதல்.

தமிழ் மொழி, பண்பாடு மற்றும் வரலாறு தொடர்பான கல்வெட்டுகளை ஆவணப்படுத்துல் மற்றும் வெளியிடுதல்.

தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கே உரித்தான சொற்கள், சொற்றொடர்கள், பேச்சுவழக்குச் சொற்களைத் தொகுத்து வெளியிடுதல்.

புலங்கள், துறைகள் மற்றும் மையங்கள்

கலைப் புலம்

சிற்பத்துறை

இசைத்துறை

நாடகத்துறை

சுவடிப் புலம்

ஓலைச் சுவடித்துறை

அரிய கையெழுத்துச் சுவடித்துறை

கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை

வளர் தமிழ்ப் புலம்

அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை

மொழிபெயர்ப்புத் துறை

அகராதியியல் துறை

சமூக அறிவியல் துறை

அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

 

மொழிப் புலம்

இலக்கியத் துறை

மொழியியல் துறை

மெய்யியல் மையம்

பழங்குடி மக்கள் ஆய்வு மையம்

நாட்டுப்புறவியல் துறை

இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி

அறிவியல் புலம்

சித்த மருத்துவத்துறை

தொல்லறிவியல் துறை

தொழில் மற்றும் நில அறிவியல் துறை

கட்டடக்கலைத் துறை

கணிப்பொறி அறிவியல் துறை

சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை

திட்டங்கள்

கலைக்களஞ்சிய மையம்

தமிழ்ப் பேரகராதி

தூய தமிழ்ச் சொல்லாக்க அகரமுதலி

ஏனைய பிரிவுகள்

அருங்காட்சியகம்

வெளியீட்டுத் துறை

நூலகம்

தொலைதூரக் கல்வி இயக்குநரகம்

கல்விசார் பாடப்பிரிவுகள்

ஆய்வியல் நிறைஞர்  மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள்

துறைகளின் கல்விசார் திறன்களின் அதிகபட்ச திறனை வழங்கும் நோக்கில், சிற்பம், இசை, நாடகம், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச் சுவடிகள், கல்வெட்டு, மொழிபெயர்ப்பு, அகராதியியல், சமூவியல், அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சி, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, இலக்கியம், மொழியியல், தத்துவம், நாட்டுப்புறவியல், இந்திய மொழிகள் பள்ளி, பழங்குடியின ஆராய்ச்சி, சித்த மருத்துவம், தொல் அறிவியல் மற்றும் கட்டடக்கலைத் துறை ஆகிய துறைகளில் ஆய்வியல் நிறைஞர்  மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. துறைகளுக்கு இடையேயான ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான வசதியும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதுகலைப் பாடப்பிரிவுகள்

இலக்கியம், மொழியியல், சிற்பம், தத்துவம், கல்வெட்டு மற்றும் தொல்லியல், நாட்டுப்புறவியல், இசை, அகராதியியல் மற்றும் அரிய கையெழுத்துச் சுவடிகள் ஆகிய துறைகளில் முதுகலை (முழுநேர) பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

சமூகவியல், சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை மற்றும் கணிப்பொறி அறிவியல் துறைகளிலும் முதுகலை (முழுநேர) பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பட்டயப் படிப்புகள்

நாடகம், மொழிபெயர்ப்பு, சித்த மருத்துவம், அகராதியியல், அரிய கையெழுத்துச்சுவடிகள், இந்திய மொழிகள் பள்ளி, தத்துவம், நாடகம், நாட்டுப்புறவியல் மற்றும் இசை ஆகிய துறைகளில் முழுநேர/பகுதிநேர பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இசை, தத்துவ மையம், கணிப்பொறி அறிவியல் மற்றும் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி சான்றிதழ் படிப்புகள் (பகுதிநேர) வழங்கப்படுகின்றன.

வழிகாட்டி நெறிமுறைகள்

“தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்”

  • மகாகவி பாரதியார்

உலகின் தொன்மையான மொழிகளில் மிகச் சிறந்த மொழி தமிழ் மொழியாகும். தமிழர்கள் எல்லா நாடுகளும் தங்களுடையது, உலகோரனைவரும் தம் சொந்தங்கள் என்றே எப்போதும் கருதுகிறார்கள்.  “யாதும் ஊரே யாவரும் கேளிர்” அதாவது “அனைத்து நாடுகளும் நமதே, அனைவரும் எங்கள் உறவினரே” (-ஜி.யு. போப்) என்னும் வரிகள் தமிழர்களின் சகோதர உணர்வின் உயரிய பண்பை உணர்த்துகிறது.  தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ் ஆராய்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அளப்பரிய சேவை செய்து வரும் ஒரு தனித்துவமான பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது.

செய்திகளும் நிகழ்வுகளும்